குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கு: ஈரோடு கோர்ட்டில் 30-ந் தேதி சீமான் ஆஜராக உத்தரவு

குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு கோர்ட்டில் வருகிற 30-ந் தேதி சீமான் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2023-10-11 00:00 GMT

குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு கோர்ட்டில் வருகிற 30-ந் தேதி சீமான் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஈரோடு திருநகர்காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினரையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

30-ந் தேதி

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 11-ந் தேதி ஈரோடு கோர்ட்டில் சீமான் நேரில் ஆஜரானார். இந்தநிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி முருகேசன் விசாரணை நடத்தினார். அப்போது சீமான் தரப்பில் அவரது வக்கீல் ஆஜரானார். சீமானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால், அவரால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி முருகேசன் வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்