சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு நாகையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய சீன தயாரிப்பிலான ரப்பர் படகு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-24 12:22 GMT

நாகை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முனாங்காடு பகுதியில் இன்று காலை காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த கடலோர காவல்படை போலீசார் விரைந்து வந்து அந்த ரப்பர் படகை சோதனை செய்தனர்.

அப்போது அந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகும். அந்த படகில் தண்ணீர் பாட்டில்கள், படகு துடுப்பு, லைஃப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இருந்துள்ளன.

மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், கடற்படை அதிகாரிகள் ஆகியோர் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிந்தது. அது படகை மோப்பம் பிடித்து அருகில் இருந்த காட்டுப்பகுதி வரை சென்றது.

காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகில் இலங்கையில் இருந்து மர்ம நபர்கள் யாரேனும் வேதாரண்யத்தில் நுழைந்துள்ளார்களா, அல்லது கடத்தல்காரர்கள் யாரேனும் வந்தார்களா என்ற கோணங்களில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்