கல்லூரி மாணவரை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, பணம் கொள்ளை

ஆத்தூரில் கல்லூரி மாணவரை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-14 19:30 GMT

ஆத்தூர்:-

ஆத்தூரில் கல்லூரி மாணவரை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

டி.வி.மெக்கானிக்

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் சையது நியாஸ் (வயது 48). டி.வி. மெக்கானிக். இவருடைய மனைவி பசித். இவர்களது மகன் முகமது அஸ்லாம் (18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதனிடையே சையது நியாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி பசித் உடன் இருந்து கவனித்து வருகிறார். முகமது அஸ்லாம் ஆத்தூரில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார்.

கட்டிப்போட்டு கொள்ளை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் முகமது அஸ்லாம் புதுப்பேட்டை பகுதிக்கு சென்று டீ குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் அப்போது அருகே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து முகமது அஸ்லாமை அடித்து உதைத்து ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டனர்.

பின்னர் வீட்டு பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் முகமது அஸ்லாமின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.

தனிப்படை

இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு சுமார் 30 வயதுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம். மேலும் அவர்கள் இந்த பகுதியை நன்கு அறிந்தவர்களாக தான் இருக்க முடியும். எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனிடையே கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்