திருத்தணி அருகே பிளஸ்-2 மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் பிணமாக மிதந்த பிளஸ்-2 மாணவன் உடலை போலீசார் மீட்டனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-07-26 07:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் பள்ளி மாணவன் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு விவசாய கிணற்றில் இருந்த மாணவனின் உடலை மீட்டனர்.

பின்னர், போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட மாணவன் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 17) என்பது தெரியவந்தது.

இவர் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் பள்ளி முடிந்ததும், திருத்தணி பகுதியை சேர்ந்த சக மாணவர்களுடன் ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் சூரியபிரகாஷ் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

அவர் நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்