கூடலூர் அருகே நள்ளிரவில் பழுதடைந்த இரும்பு பாலம் உடைந்து விழுந்தது- புதிதாக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடலூர் அருகே நள்ளிரவில் பழுதடைந்த இரும்பு பாலம் உடைந்து விழுந்தது. அதனால் புதிதாக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update:2022-09-22 00:30 IST

கூடலூர்

கூடலூர் அருகே நள்ளிரவில் பழுதடைந்த இரும்பு பாலம் உடைந்து விழுந்தது. அதனால் புதிதாக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இரும்பு பாலம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அலுவலகம் நியூஹோப் பகுதியில் உள்ளது. அலுவலகம் அருகே ஆறு ஓடுகிறது. இதனால் ஆற்றைக்கடந்து செல்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றின் மறுபுறம் தனியார் எஸ்டேட்டில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு நியூஹோப் கடைவீதிக்கு வருவதற்கு ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையோரம் பெருமளவு மண்ணரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் பஸ் போக்குவரத்துக்காக சிமெண்ட் பாலமும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.

உடைந்து விழுந்தது

குறிப்பிட்ட எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் தங்களது வீடுகளில் இருந்து கடைவீதிக்கு வருவதற்காக ஆங்கிலேயர் காலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ஆற்றின் கரையோரம் மண் சரிவு ஏற்பட்டு இரும்பு பாலத்தின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்த தாசில்தார் சித்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிதாஸ், பேரூராட்சி தலைவர் சித்ராதேவி மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மூன்று குடும்பங்களை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றி தங்க வைத்தனர். இதேபோல் தோட்ட தொழிலாளர் குடும்பத்தினர் வேறு பாதையை பயன்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் புதிதாக அங்கு பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்