எதிர்பாராத வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த போலி வக்கீல் கைது

சென்னையில் எதிர்பாராத வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த போலி வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-16 02:36 GMT

சென்னை கொளத்தூரை சேர்ந்த சாந்தி என்பவர், ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் ரம்யா, வக்கீல் பாபு ஆகியோரிடம் இருந்து தனது மகனை மீட்டுத்தரக்கோரி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சென்னை அண்ணாநகரை சேர்ந்த பாபு ஒரு போலி வக்கீல் என்பது தெரியவந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்ததாக போலியான சான்றிதழை அவர் சமர்ப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலி வக்கீல் பாபுவை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. மேலும் இவர் மீது வேறு ஏதாவது வழக்குகள் இருக்கிறதா? யாராவது இவரை நம்பி ஏமாந்திருக்கிறார்களா? யாருக்காவது அவர் ஆஜராகி இருக்கிறாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் தலைமறைவாக இருந்த போலி வக்கீல் பாபு, தஞ்சையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையிலான தனிப்படை தஞ்சை மாவட்டம் மாணாங்கோரை என்ற இடத்தில் வைத்து போலி வக்கீல் பாபுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்