குப்பைக்கிடங்கில் தீப்பிடித்தது

வீரபாண்டி அருகே குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.

Update: 2023-04-09 19:00 GMT

வீரபாண்டி அருகே உப்பார்பட்டி விலக்கு- தப்புகுண்டு சாலையில் அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் பணியாளர்கள் மூலம் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து, மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் குப்பை பிரித்தெடுப்பதற்கு பணியாளர்கள் வந்தனர்.

அப்போது குப்பைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். குப்பையில் பற்றிய தீ மளமளவென பரவியதால், அந்த பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. தகவலறிந்த தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயை பரவவிடமால் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். அந்த பகுதியில் காற்று அதிகம் வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே நகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்