வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா விற்பனை செய்த கும்பல்

ரூ.16½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-22 19:30 GMT

ஓமலூர்:-

ஓமலூர் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து கும்பல் குட்கா விற்பனை செய்துள்ளது. ரூ.16½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் குட்கா பதுக்கல்

ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மரத்துகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன் (வயது 40). இவருக்கு சொந்தமான வீட்டை, மேச்சேரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் பினாயில் வியாபாரம் செய்வதாக கூறி வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

அந்த வீட்டிற்கு அடிக்கடி சரக்கு வேன் ஒன்று வந்து சென்றதால் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி ஓமலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கிருந்தவர்கள் போலீசார் வருவதை கண்டதும் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

ரூ.16½ லட்சம் குட்கா

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 2 ஆயிரத்து 475 டன் இருந்ததாக தெரிகிறது. அதன் மதிப்பு 16 லட்சத்து 65 ஆயிரத்து 960 ரூபாய் என கூறப்படுகிறது. குட்கா கொண்டு வர பயன்படுத்திய சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. குட்காமூட்டைகளை பதுக்கி வைத்த மணி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பல் குறித்து விசாரணை

இந்த விவகாரத்தில் மணிக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஏனென்றால் இந்த வீட்டில் பதுக்கி வைத்து அதன்பிறகு கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இதில் கும்பலாக நபர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

எனவே அவர்கள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்