போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதா பிரமுகர் தீக்குளிப்பு

சிவகாசி அருகே போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதா பிரமுகர் திடீரென தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Update: 2023-08-03 18:46 GMT

சிவகாசி

சிவகாசி அருகே போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதா பிரமுகர் திடீரென தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பா.ஜனதா பிரமுகர்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 39). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகியாக உள்ளார். திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த தொழில் அதிபர் ஈஸ்வரன் (48) என்பவருக்கு நிலம் வாங்கி கொடுப்பதாக கடந்த மாதம் 2 தவணைகளாக ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சத்யராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது.

தீக்குளிப்பு

இதுபற்றி திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 7-ந் தேதி சத்யராஜை கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட சத்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று மாலை திருத்தங்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்த சத்யராஜ் திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் அவரது வேட்டி மற்றும் சட்டையில் தீப்பிடித்தது. இதனால் பதற்றம் அடைந்த சத்யராஜ் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் ஓடினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து சத்யராஜ் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பரபரப்பு

பின்னர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சுமார் 30 சதவீதம் தீக்காயம் அடைந்த சத்யராஜூக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சத்யராஜ் எதற்காக தீக்குளித்தார்? என்பது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதா பிரமுகர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்