லாரி மோதி நகராட்சி பணியாளர் தலைநசுங்கி பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் நகராட்சி பணியாளர் தலைநசுங்கி பலியானார்.

Update: 2023-10-07 17:57 GMT

நகராட்சி பணியாளர்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 58). இவர் கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் பம்பு ஹவுசிங் ஆபரேட்டராக (குடிநீர் மோட்டார் இயக்குபவர்) கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் காட்டுப்புத்தூரில் இருந்து புகழூர் நகராட்சி அலுவலகத்திற்கு வேலைக்காக வந்து கொண்டிருந்தார்.

தலைநசுங்கி பலி

சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து பழனிக்கு லாரியில் தவிட்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, எதிர்பாராத விதமாக தங்கவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த தங்கவேலின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே தங்கவேல் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தவிபத்து குறித்து தங்கவேலின் மகள் பிரியா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சவடமுத்து (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்