துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
பெருந்தோட்டம் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருவெண்காடு:
பெருந்தோட்டம் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார நிலையம்
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு உட்பட்ட அகர பெருந்தோட்டம், அல்லிமேடு, சாவடி குப்பம், மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 8,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெருந்தோட்டத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இதில் செவிலியர் மற்றும் பணியாளர் தங்கி மருத்துவ சேவை செய்து வந்தனர். இந்த துணை நிலையத்தின் மூலம் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
சேதமடைந்த கட்டிடம்
கடந்த சில ஆண்டுகளாக துணை சுகாதார நிலைய கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தால், தற்போது சுகாதார நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இதனால் போதிய மருத்துவ சேவை வசதி கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த துணை சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துளனர்.
புதிதாக கட்ட வேண்டும்
இதுகுறித்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலகுரு கூறுகையில்:-அதிக மக்கள் தொகை கொண்ட பெருந்தோட்டம் ஊராட்சியில் கடலோர கிராமங்களும் அடங்கியுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு கூட 4 கிலோமீட்டர் தூரம் உள்ள திருவெண்காட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்ர சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.