சென்னை: 2-வது மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் பலி
கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.;
சென்னை ,
சென்னை எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் தெருவில் மாநகராட்சி நடுநிலை பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் தரைதளம் மற்றும் 2 அடுக்குகளுடன் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் பேரா, தனது மகன் சவமென் பேராவுடன் (வயது 15) தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை அவர்கள் கட்டிடத்தின் 2-வது தளத்தில் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் சவ்மென் பேரா அங்கு போடப்பட்டிருந்த சாரத்தின் மீது நின்றபடி பலகையை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சவ்மென் பேராவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சவ்மென் பேரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.