தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி

கீரமங்கலம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.

Update: 2023-07-19 18:29 GMT

தென்னை நார் தொழிற்சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கரம்பக்காடு பனங்குளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் தென்னை நார், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். இவர் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இந்ததொழிற்சாலையில், சுமார் 75 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 35 பேர் தொழிலாளியாக உள்ளனர்.

தொழிலாளி பலி

இந்நிலையில் தொழிற்சாலையில், நேற்று  நள்ளிரவில் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது பீகார் மாநிலம், டிநகர் பூர்மியா பகுதியை சேர்ந்த தொழிலாளியான பாபு காதர் மகன் பைரோஸ் காதட் (வயது 30) என்பவர் மேற்பார்வை செய்ய சென்ற போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தின் பெல்ட்டில் சிக்கி அழுத்தப்பட்டதால் கை உடைந்து நெஞ்சு, கழுத்துப்பகுதியும் காயமடைந்தது.

இதையடுத்து சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தி பைரோஸ் காதட்டை மீட்டனர். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு பைரோஸ் காதட் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சக தொழிலாளிகளுடன் பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்