நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்
கர்நாடக தேர்தல் முடிவுகள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் ஆகும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.;
கர்நாடக தேர்தல் முடிவுகள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் ஆகும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
பண மதிப்பிழப்பு
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-
ராஜீவ்காந்தியின் நினைவுதினத்தையொட்டி விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். பயங்கரவாதத்தால் பலர் உயிரிழக்கும் நிலை தொடர்கிறது. எனவே பயங்கரவாதம் ஒழிக்கப்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது. தற்போதும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தான் 2,000 ரூபாய் நோட்டை தங்களிடம் வைத்திருப்பார்கள். இந்த நடவடிக்கை அனைவரையும் பாதிக்கும். பொருளாதார நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முன்னோட்டம்
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வின் தோல்வியை மறைப்பதற்காகவே பா.ஜ.க. அரசு 2000 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்துள்ளதாக முதல்-அமைச்சர் கூறியுள்ள கருத்து ஏற்புடையது தான். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் கர்நாடக தேர்தல் முடிவு எதிரொலிக்கும். பா.ஜ.க.வை போன்று ஒரே இரவில் முதல்-அமைச்சரை மாற்றுவது, எம்.எல்.ஏ.க்களுக்கு விருப்பம் இல்லாதவரை முதல்-அமைச்சர் ஆக்குவது போன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் இறங்காது. தமிழகத்தில் மது ஒழிப்பு என்பது அவசியம் தான். ஆனால் மக்கள் இதை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது முக்கியம்.
டாஸ்மாக்கடைகள்
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது அரசு டாஸ்மாக்கடைகள் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் முன்னாள் நகர சபை துணை தலைவர் பாலகிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.