கிருஷ்ணகிரியில் நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை

போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

Update: 2022-07-07 08:05 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் முரளி கிருஷ்ணா, கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை அவர் எழுதியுள்ளார். இருப்பினும் அந்த தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியாததால், இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதுவதற்காக மாணவர் முரளி கிருஷ்ணா தயாராகி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை முரளி கிருஷ்ணா, தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் அறையின் கதவை திறந்து பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக முரளி கிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், தனக்கு நீட் தேர்வு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், மருத்துவ படிப்பில் சேரும் அளவிற்கு தன்னால் மதிப்பெண் பெற முடியாது என்றும் முரளி கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்