சென்னை கோயம்பேடு திரையரங்கில் 'பத்து தல' படம் பார்க்க வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த தியேட்டர் ஊழியர்

சென்னை கோயம்பேடு திரையரங்கில் ‘பத்து தல’ படம் பார்க்க வந்த பெண்ணை உள்ளே அனுமதிக்க தியேட்டர் ஊழியர் மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Update: 2023-03-31 08:51 GMT

நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் நேற்று வெளியானது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று நரிக்குறவ பெண் ஒருவர், 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என 10 பேருடன் இந்த திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்தார்.

அந்த பெண்ணின் கையில் டிக்கெட் இருந்தும், அவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க அங்கிருந்த ஊழியர் மறுத்து விட்டார். அந்த பெண், டிக்கெட்டை காண்பித்து படம் பார்க்க தியேட்டருக்குள் அனுமதிக்கும்படி பல முறை கேட்டும் அந்த ஊழியர், "உள்ளே அனுப்ப முடியாது, வெளியே போ" என்பதுபோல் சைகை காண்பித்தார்.

இதனை அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. திரையரங்கில் தீண்டாமை கொடுமை என அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வந்தனர். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் அந்த தியேட்டருக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிம்பு ரசிகர் மன்றம் சார்பாக சில டிக்கெட்டுகளை, அங்கிருந்தவர்களுக்கு இலவசமாக கொடுத்து விட்டு சென்றதாகவும், அந்த டிக்கெட்டுடன் வந்தவர்களை முதலில் அனுமதிக்க மறுத்தாலும் பின்னர் அவர்களை படம் பார்க்க வைத்து, பாப்கான் வாங்கி கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்ததாகவும் தியேட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி அந்த பெண் கூறும்போது, "நாங்கள் நல்ல ஆடை அணியாமல் வந்ததாலும், எங்கள் மீது துர்நாற்றம் வீசுவதாகவும், தியேட்டருக்கு வருபவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வோம். தியேட்டரில் எச்சில் துப்பிவிடுவோம் என்று கூறி டிக்கெட் இருந்தும் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என கூறினார்.

ஆனால் தியேட்டர் நிர்வாகம் தரப்பில் கூறும்போது, "பத்து தல படம் யு.ஏ. சான்றிதழ் பெற்ற படம் என்பதால் சிறுவர்கள் பார்க்க அனுமதி இல்லை. அந்த பெண் 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுடன் தியேட்டருக்கு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அவர்கள் தியேட்டரில் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டதாக" தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தார் மாதவன், அந்த தியேட்டருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார், தியேட்டர் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்