வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா? என அவர்களே மனம் திறந்து சொல்கிறார்கள்.;
தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி சில ஆண்டுகளாக அதிக அளவில் வருகிறார்கள்.
வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலி அதிகமாக இருப்பதால் அவர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அவர்களின் வருகை குறித்து சில விமர்சனங்களும் இருக்கின்றன. அவர்களின் அதிக வரவால் தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாக அரசியல் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இருந்தாலும் அவர்கள் இல்லை என்றால் கட்டிட வேலை, ஓட்டல் வேலை என்று எத்தனையோ வேலைகள் முடங்கிப் போகும் நிலைதான் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
பீதி ஏற்படுத்திய வீடியோக்கள்
பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து தினந்தோறும் ரெயில்கள் மூலமாக சென்னைக்கு சாரை சாரையாக வடமாநிலத்தவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இப்போது வரை பெருகி கொண்டே வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரு வீடியோக்கள் வெளியானது. பீகார் மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற அந்த வீடியோக்கள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. இது தமிழகத்தில் தங்கி பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தையும் உண்டாக்கியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதில் உண்மை கிடையாது என்றும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் தங்கி இருக்கும் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள்? என்பதை அவர்களே தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
அச்சம் அடைய தேவையில்லை
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கூறியதாவது:-
தமிழகத்தில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் தாக்கப்படுவதை போன்று வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது போலியானது. அத்தகைய சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து மாநில மக்களும் பாதுகாப்பான சூழலில் வாழும் நிலையே உள்ளது. எனவே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ பதிவால் வட மாநில தொழிலாளர்களின் அச்சம் அடைய தேவையில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், விசைத்தறிக்கூடங்கள் மற்றும் கட்டிட பணிகள் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் வட மாநில தொழிலாளர்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். எவ்வித பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது. உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். எனவே தமிழ்நாட்டில் எவ்வித தயக்கமும் இன்றி வட மாநிலத் தொழிலாளர்கள் அன்றாட பணியில் ஈடுபடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாங்கள் முழு பொறுப்பு
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:-
எங்கள் கோழிப்பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று பரவிய வீடியோ பதிவை பார்த்து பதற்றம் அடைந்தனர். ஆனால் அது போலியானது என அரசு தெளிவாக விளக்கம் அளித்து விட்டது. மேலும் அவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உறுதுணையாக உள்ளது. அதை நாங்கள் எங்கள் தொழிலாளர்களிடம் கூறி புரிய வைத்தோம். மேலும் வெளியில் செல்லும்போது ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக எங்களை அழைக்குமாறு செல்போன் என்னை வழங்கி உள்ளோம். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் முழு பொறுப்பு என அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தோம். அதைத்தொடர்ந்து அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய பாதுகாப்பு
வடமாநில பெண் தொழிலாளி அனிதா கூறியதாவது:-
சமூக வலைதளங்களில் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டது போன்ற வீடியோவை நாங்கள் பார்த்தோம். அதனால் எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே செல்ல பயமாக உள்ளது. ஆனால் அது போலியான வீடியோ என்றும், பயப்பட வேண்டாம் எனவும் போலீசாரும் கோழிப்பண்ணை உரிமையாளரும் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே தொடர்ந்து நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என நம்புகிறேன். போலீசாரும், கோழிப்பண்ணை உரிமையாளரும் நம்பிக்கை கூறியிருப்பது, எங்களுக்கு பயத்தை சற்று குறைத்து ஆறுதலாக்கி உள்ளது.
வீடியோ பார்த்து அதிர்ச்சி
பீகாரை சேர்ந்த பிரவீன் குமார்:-
நான் 18 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி 5 குழந்தைகள் உள்ளது. அவர்கள் நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். என்னோடு பீகாரை சேர்ந்த சுமார் 40 பேர் கோழிப்பண்ணையில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் இதுவரை இங்கு பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் அது போலியானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என எங்கள் முதலாளி தெரிவித்துள்ளார். ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக செல்போனில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து எங்களுக்கு அவர் உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறார். எனவே பயமின்றி நாங்கள் பணியை தொடர்ந்து வருகிறோம்.
போலியான வதந்திகள்
தனியார் பைப் நிறுவன தொழிலாளி ராகுல்:-
நான் தனியார் பைப் கம்பெனியில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் பழகுகிறார்கள். எங்களுக்கு வேலை வழங்குவதோடு, வாழ்வாதாரம் செழிக்க உதவுகிறார்கள். எனவே நாங்கள் நலமுடன் உள்ளோம். போலியான வதந்திகளை நம்ப நாங்கள் தயாராக இல்லை. ஏதேனும் ஒரு பிரச்சினை என்றால் உதவக்கூடிய எண்ணம் படைத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதனால் நாங்கள் முழுமையாக பாதுகாப்பான முறையில் இருப்பதை உணர்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாமக்கல் கோழிப்பண்ணையில் பீதியில் தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், ரிக் வண்டிகள், ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் பீகார் மாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று வெளியான வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் அச்சத்தில் சொந்த ஊருக்கு செல்லும் முடிவை எடுத்திருக்கிறார்கள். இந்தநிலையில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களுடன் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் நேரில் சென்று பேசினார். அப்போது வடமாநில தொழிலாளர் குறித்து பரவி வரும் வீடியோ முற்றிலும் பொய்யானது எனவும், மேலும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தக்க பாதுகாப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார். யாரும் அச்சமடைய தேவை இல்லை என்றும், ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். எந்த நேரத்திலும் உரிய உதவியை செய்ய போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தயாராக இருப்பதாக வட மாநில தொழிலாளர்களிடம் கூறினார்.