தூத்துக்குடியில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலை: விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விளாத்திகுளம் அருகே உள்ள சாலையின் இரண்டு பக்கமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வனம் போல் காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.;
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி, சின்னூர் மாவில்லோடை, என்.ஜெகவீராபுரம், உத்தாண்டாபுரம், கழுதாசலாபுரம், வெங்கடாசலாபுரம், குமாராபுரம், சுப்பிரமணியபுரம், வி.சுப்பையாபுரம், பூதலாபுரம், சங்கரப்பநாயக்கன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கந்தசாமிபுரம், புதுசின்னையாபுரம், பி.ஜெகவீரபுரம், மாதலாபுரம் துரைச்சாமிபுரம் குமாரலிங்கபுரம், எல்.வி.புரம் சென்னம்பட்டி உள்ளிட்ட 40 கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மருத்துவம், பள்ளி, கல்லூரிகளுக்கு விளாத்திகுளம் செல்வதற்கும், புதூர் செல்வதற்கும் கடல்குடி முதல் புதூர் வரை உள்ள சாலை மற்றும் சின்னூர் கிராமத்திலிருந்து என்.ஜெகவீரபுரம் வழியாக புதூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு சாலைகளும் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாமல், சாலையின் இரண்டு பக்கமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வனம் போல் காட்சியளிப்பதால், இருசக்கர வாகனங்கள் விலகி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகள் மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் லேசான மழைக்கு குண்டும் குழியமாக உள்ள இந்த சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் அடிக்கடி விபத்துக்குள்ளாகி காயம் ஏற்படும் நிலை உள்ளது.
அவசர உதவிக்காக விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அழைத்தால், 108 வாகனமும் உரிய நேரத்தில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையின் இரு பக்கமும் உள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தி, புதிய சாலை அமைத்து தரவேண்டும் என்று 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.