தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாளமுத்துநகர் பஜாரில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி 6-வது தெருவை சேர்ந்த மணி மகன் ஜெகன் (வயது 20), சிலுவைப்பட்டி கொடிமரத்தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் சங்கரலிங்கம்(33) என்பதும், அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஜோதி நகர், கருணாநிதி நகர், வக்கீல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வக்கீல் தெருவில் உள்ள திருமண மண்டபம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அந்த வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி எம்.எஸ்.எஸ்.வி. நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிமாறன் (வயது 26), கோவில்பட்டி ராஜீவ்நகர் 6-வது தெருவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் புஷ்பராஜ்(எ) ஜான்(19) என்பதும் தெரியவந்தது. இந்த இருவரும் மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கோவில்பட்டி பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜான் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரியில், அவரோடு படிக்கும் சக நண்பர்களுக்கும் கஞ்சாவை விற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் இவரது தந்தை மோகன்ராஜ் கோவில்பட்டியில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.