2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவின் கூட்டணி கணக்கு கைகொடுக்குமா...?
அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.;
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் பரீட்சைக்கு தயாராகி வருகின்றன.
ஆளுங்கட்சியான திமுக, கடந்த தேர்தலை போலவே இந்தத் தேர்தலிலும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.
ஆனால், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம். 100 சதவீதம் வெற்றி உறுதி என்று நம்பிக்கையுடன் பேசினார். அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.
தமிழக வாக்காளர்கள் எப்போதுமே நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகியவற்றை பிரித்து பார்த்தே வாக்களித்து வருகின்றனர். இரண்டு தேர்தலிலும் வாக்காளர்களின் மனநிலை மாறுபடும். கடந்த (2021) சட்டசபை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாஜக (20), பாமக (23), தமாகா (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக சின்னத்தில் 12 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். ஆனால், அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதாவது, அதிமுக வேட்பாளர்கள் 65 பேரும், பாஜகவினர் 4 பேரும், பாமகவினர் 5 பேரும், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஒருவரும் என வெற்றிபெற்றனர்.
வாக்கு சதவீதம் என்று பார்த்தால், அதிமுக 33.28, பாமக 3.81, பாஜக 2.63 என்று பெற்றன. இதை மொத்தமாக கணக்கிட்டால், அதிமுக கூட்டணிக்கு 39.72 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதே நேரத்தில், திமுக கூட்டணிக்கு 45.15 சதவீத வாக்குகள் கிடைத்தன. இரண்டு கூட்டணிக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 5.43 சதவீதம் ஆகும்.
இந்த முறை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் இணைந்திருப்பதால், கடந்த முறை அந்தக் கட்சி வாங்கிய 2.4 சதவீத ஓட்டுகள் கூடுதலாக திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று நம்பலாம். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, தற்போதைய நிலையில் திமுக கூட்டணியின் கையே ஓங்கி உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக, தமாகா ஆகிய கட்சிகளே இடம்பெற்றுள்ளன. பாமக, தேமுதிக, அமமுக, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணையும் என்று நம்புகிறது.
அதன் அடிப்படையிலேயே, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக - 170, பாஜக - 23, பாமக - 23, தேமுதிக 6, அமமுக -6, ஓ.பன்னீர்செல்வம் அணி - 3, தமாகா -3 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை கேள்விப்பட்ட உடனேயே தேமுதிகவும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இதை ஏற்கமாட்டோம் என்று கூறிவிட்டன. ஓ.பன்னீர்செல்வமும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டார்.
இதுபோன்ற நிலையில், அதாவது கூட்டணியே பலமாக இல்லாத நிலையில், எப்படி சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார் என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. போதாக்குறைக்கு இந்த தேர்தலில் புதிதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் நிற்கிறது.
விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுவும் அவருக்கு ஓட்டாக மாறினால், அது திமுக, அதிமுக கூட்டணிக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படும் என்பது போக போகத்தான் தெரியும்.