கீழடி அகழாய்வு பணிக்கு நல்ல அனுபவம் வாய்ந்தவர்களை பணி அமர்த்த வேண்டும்-முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் வலியுறுத்தல்

கீழடி அகழாய்வு பணிக்கு நல்ல அனுபவம் வாய்ந்தவர்களை பணி அமர்த்த வேண்டும் என முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-08-07 19:08 GMT

திருப்புவனம்,

கீழடி அகழாய்வு பணிக்கு நல்ல அனுபவம் வாய்ந்தவர்களை பணி அமர்த்த வேண்டும் என முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

பேட்டி

திருப்புவனம் யூனியனுக்குட்பட்ட கீழடியில் பல்வேறு கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது 8-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கீழடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு நடக்கும் இடங்கள் சரியானதாக இல்லை என தோன்றுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஏனெனில் இங்கு கிட்டத்தட்ட 110 ஏக்கர் இருக்கிற இடத்தில் ஒரு சரியான இடத்தை தேர்வு செய்து அதில் ஆய்வுகளை மேற்கொண்டால் அகழாய்வு பொருட்கள் கண்டிப்பாக கிடைக்கும். ஏற்கனவே நாங்கள் இந்த பகுதியில் நடைபெற்று முடித்த அகழ்வாராய்ச்சி பணிகளை மட்டும் தற்போது இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆய்வாளர்கள் எங்களுடைய தொடர்ச்சியை தொடர்ந்து செய்தால் கூட இன்னும் பல ஆதாரங்கள் இங்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அனுபவம் வாய்ந்தவர்களை

அதிலும் குறிப்பாக கீழடி அகழாய்வில் தொல்லியல் துறையில் எந்த அதிகாரிகள் அனுபவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளார்களோ அவர்களை தேர்வு செய்து தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அப்போது தான் இந்த அகழ்வாராய்ச்சியில் சரியான முடிவுகள் கிடைக்கும். ஏனென்றால் எங்களுடைய முன் அனுபவம் தான் அந்த இடத்தை நாங்க தேர்வு செய்ததற்கான முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் பணியில் இருந்தபோது ஓராண்டு முழுமையாக இந்த வைகை நதியில் பயணம் செய்து அதில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அகழாய்வு செய்தோம். அவ்வாறு நாங்கள் கீழடி அகழாய்வு தளத்தை முடிவு செய்து ஆராய்ச்சி செய்தபோது பல்வேறு அரிய தகவல்கள் கிடைத்தன. அதேபோல் தான் இந்த பணியில் நல்ல அனுபவம் உள்ளவர்களை பணியில் அமர்த்தினால் இந்த ஆராய்ச்சியில் நல்ல ஆதாரங்களை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்