வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

முதுமலை சாலையில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. அப்போது வாலிபர்கள் லாரியில் ஏறி உயிர் தப்பினர்.;

Update:2023-04-17 00:15 IST

கூடலூர், 

முதுமலை சாலையில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. அப்போது வாலிபர்கள் லாரியில் ஏறி உயிர் தப்பினர்.

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த சாலையில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் அடிக்கடி சாலையோரம் வருவது வழக்கம். சில சமயங்களில் சிறுத்தை, கரடி சாலையை கடந்து செல்வதை காண முடியும். இதேபோல் முதுமலையில் இருந்து மசினகுடி செல்லும் சாலையிலும் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இதை சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்தநிலையில் முதுமலை கார்குடி பகுதியில் காட்டு யானை கடந்த 2 வாரங்களாக சாலையோரம் முகாமிட்டு வருகிறது. தொடர்ந்து கர்நாடகா மற்றும் கூடலூர் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களை அடிக்கடி துரத்தி வருகிறது. சில நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் சுற்றுலா பயணிகளையும் விரட்டுகிறது.

2 வாலிபர்கள் தப்பினர்

நேற்று முன்தினம் சாலையில் நின்ற காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் சரக்கு லாரி நடுரோட்டில் நின்றது. அதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காட்டு யானை சாலையில் நிற்பதை கண்டு லாரியின் இடதுபுறம் நின்றனர். காட்டு யானை லாரியை சுற்றிவந்து அவர்களை தாக்க முயன்றது. இதை உணர்ந்த டிரைவர், கிளீனர் 2 வாலிபர்களையும், லாரிக்குள் ஏறுமாறு கூறினர். தொடர்ந்து காட்டு யானை வருவதை கண்ட வாலிபர்கள் லாரிக்குள் ஏறி உயிர் தப்பினர்.

பின்னர் சிறிது நேரம் அப்பகுதியில் நின்ற காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதனால் 2 வாலிபர்கள் பாதுகாப்பாக கூடலூர் வந்து சேர்ந்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேபோல் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை வாகனங்களை விரட்டுவதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்