தமிழ்நாட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 12.34 லட்சம் பேர் பயன் பெற்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (27.12.25) பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகிநகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி சென்னையில் ஒரு மிக பெரிய வகையிலான புதிய மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார். “நலம் காக்கும் ஸ்டாலின்” என்கின்ற அந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு 3 என்கின்ற வகையிலும் சென்னை பெருநகராட்சியில் 15 இடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் 19 வட்டாரங்களிலும் தலா 3 என்கின்ற வகையிலும் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த முகாம்களைப் பொறுத்தவரை நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற முகாம் வெறும் மருத்துவ முகாமாக மட்டுமல்லாமல் முழு உடல் பரிசோதனை என்கின்ற வகையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 21வது வாரத்தில் 26வது முறையாக இன்று முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையோடு இணைந்து 31 மாவட்டங்களில், 44 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் முழு உடல் பரிசோதனை என்கின்ற வகையில் முழுமையாக மருத்துவ பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12,34,908 பேரும் முழு உடற் பரிசோதனை என்கின்ற வகையில் மகத்தான பலனைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற சீரிய திட்டத்தில் இந்த முகாம்களில் பயன்பெறுபவர்கள் அங்கிகரிக்கபட்ட காப்பீட்டு திட்டத்திற்கான அட்டைகளையும் உடனடியாக பெற்று செல்கிறார்கள். அவர்கள் மட்டுமே இந்த முகாம்களின் வாயிலாக 37,445 பேர் பயன் பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள்:
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளும் இம்முகாமில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ்கள் பெற்றிருந்தால்தான் அரசாங்கத்தின் சார்பாக வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை எளிதாக கிடைக்கும். இதற்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் பெறுவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவகத்திற்கு சென்றால் மட்டுமே வாங்க முடியும்.
அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், இந்த முகாம்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த முகாம்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பயன் பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 46,657. மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் என்கின்ற திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் இதில் 7 மாவட்டங்களில் தற்போது வரை இந்த பணி முடிவு பெற்றுள்ளது. மயிலாடுதுறை, நீலகிரி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இந்த பணி முழுமையாக முடிவு பெற்றுள்ளது. மீதமுள்ள 31 மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 44 இடங்களில் இம்முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 9,951 பேர் மருத்துவ முகாமில் பயன்பெற்று வருகின்றனர்.
சிறப்பு மருத்துவ சேவைகள்:
இந்த முகாம்களை பொருத்தவரை பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மன நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்தியமுறை மருத்துவம் என்று 17 வகையான மருத்துவம் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்டு வருகிறது.
இதை பொறுத்தவரை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தல் போன்ற பல்வேறு பணிகள் இம்முகாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் வரை 11 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 12வது முகாம்களாக இன்று சென்னை கண்ணகிநகரில் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை 26,893 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் சம்பத், மண்டல குழுத் தலைவர் மதியழகன், நகரநல அலுவலர் ஜெகதீசன், கவுன்சிலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.