தனியார் கம்பெனியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

வியாசர்பாடி தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியின் 3-வது மாடியில் இருந்து தவறி கீேழ விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-06 06:43 GMT

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் கூட்டுறவு தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவருக்கு சொந்தமான ஸ்டீல் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

இந்த கம்பெனியில் பீகாரைச் சேர்ந்த 27 பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர். அங்கு பீகாரைச் சேர்ந்த கமலேஷ் குமார் (வயது 50) என்பவரும் 5 வருடங்களாக வேலை செய்து வந்தார். கம்பெனியின் முதல் 2 தளங்களில் தொழிலாளிகள் தங்கும் அறை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு 20 பேர் தூங்குவதற்காக கம்பெனியின் 3-வது தளம் (மொட்டை மாடிக்கு) சென்றனர். அவர்களுடன் கமலேஷ் குமாரும் தூக்கி கொண்டிருந்த நிலையில் அவருடன் தூங்கி கொண்டிருந்தவர்கள் காலை எழுந்து பார்த்தபோது கமலேஷ் குமார் 3-வது மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் எம்.கே.பி. நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலெஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கமலேஷ் குமார் தூக்க கலக்கத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

சென்னை அடுத்த புழல் கதிர்வேடு சத்தியமூர்த்தி நகரில் தனியார் நிறுவனம் மூலம் 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த மே 30-ந் தேதி திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவராஜ் (28) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் தேவராஜ் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்