ஓமலூர் அருகே வனப்பகுதியில் இளம்பெண் எரித்துக்கொலை-போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே உள்ள வனப்பகுதியில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-24 01:48 IST

ஓமலூர்:

இளம்பெண் உடல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி அருகே சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஜோடுகுளி புலிசாத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புற வனப்பகுதியில் நேற்று காலை ஒரு இளம்பெண்ணின் பிணம் பாதி தீயில் எரிந்த நிலையில் கிடந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற மாடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் 108 ஆம்புலன்சில் சென்ற ஊழியர்கள் இளம்பெண் உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

எரித்துக்கொலை

இதைத்தொடர்ந்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தீவட்டிப் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளம்பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் பிணமாக கிடந்தது 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் என்பதும், அவர் எரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. பாதி துணி, உடல் எரிந்த நிலையில் இருந்தது. அந்த பெண் சிவப்பு நிற சுடிதார், பேண்ட் அணிந்திருந்தார். மேலும் உடல் அருகே தாலிக்கொடி, காலணி மற்றும் செடிகளை வெட்டக்கூடிய சிறிய கத்தரிக்கோல் ஆகியவை கிடந்தன.

போலீசார் விசாரணை

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வனப்பகுதியில் இருந்து புலிசாத்து முனியப்பன் கோவில் வழியாக தேசிய நெடுஞ்சாலை ஜோடுகுளி அருகே சிறிது ஓடி விட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த இளம்பெண் யார்? அவரை கொலை செய்து வனப்பகுதியில் கொண்டு வந்து எரித்தார்களா? அல்லது வனப்பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்துவிட்டு எரித்து கொன்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர் அருகே வனப்பகுதி யில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்