ஏ.மழவராயனூரில்ஆட்கொண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் :ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

ஏ.மழவராயனூரில் உள்ள ஆட்கொண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-10 18:45 GMT


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ. மழவராயனூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், சமய புலவர்களால் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற கோவிலான அமுதவல்லி தாயார் சமேத ஆட்கொண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து, சுமார் 65 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 8-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, கும்ப அலங்காரம் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர், நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்து, பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

இதில், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களை சிவாச்சாரியார்கள் வீதிஉலாவாக எடுத்து சென்று ஆட்கொண்டேஸ்வரர் கோவில் கோபுர விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் விநாயகர், சுப்பிரமணியர், அமுதவல்லி தாயார் கோவில் கலசங்கள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நமசிவாய என்று பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் மீது டிரோன் உதவியுடன் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் அமுதவல்லி தாயார் சமேத ஆட்கொண்டேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு ஏற்பாட்டின் பேரில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்