சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை
சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
பொள்ளாச்சி,
சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவசர கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொள்ளாச்சி நகரின் முக்கிய சாலைகளில் உள்ள அனைத்து சாலை தடுப்புகள் சுவர்களிலும் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை, சுவர் விளம்பரம் செய்ய தடை விதிப்பது, சொத்து வரி மண்டல வாரியாக பொது சீராய்வு செய்தல் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா:- தற்போது 600 சதுர அடிக்கு உதாரணமாக ரூ.1,000 வரி என்று எடுத்துக் கொண்டால், தற்போது உயர்த்தப்பட்ட பிறகு வரி ரூ.1,250 வசூலிக்கப்படுமா? எந்த அடிப்படையில் வரி உயர்வு செய்யப்பட்டு உள்ளது என்பதை விளக்க வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள்
கவுன்சிலர் மகேஸ்வரி:- தூய்மை பணியாளர்களுக்கு சீருடை கொடுக்கவில்லை. கிழிந்த சீருடைகளை அணிந்து வேலை செய்து வருகின்றனர். மேலும் கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காததால், வெறும் கைகளால் குப்பைகளை அள்ளுகின்றனர். இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் குப்பைகளை எடுத்து செல்லும் தள்ளுவண்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்:- வரி விதிப்பை மிகவும் சிரமப்பட்டு குறைத்து உள்ளோம். மேலும் வரி இல்லாத இனங்கள் மூலம் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். தெருவிளக்குகள் பராமரிப்பதற்கு கூடுதலாக வாகனங்கள் மற்றும் ஆட்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒத்தி வைக்கக்கூடாது
ஆணையாளர் தாணுமூர்த்தி:- நகராட்சியில் 19.5 சதவீதம் வரி விகிதம் உள்ளது. இதை பொது, குடிநீரில் தலா ஒரு சதவீதம் வீதம், 2 சதவீதம் என குறைத்து 17.5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு டெண்டர் விடப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்படும். நகராட்சியில் பதிவு செய்தவர்கள் மட்டும் டெண்டர் எடுத்து பணிகள் செய்ய முடியும். பதிவு செய்யாதவர்களுக்கு டெண்டர் கொடுக்க முடியாது என்றார்.
அப்போது பெரும்பாலான தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க கூடாது. மீண்டும் தீர்மானம் வைத்து பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஆகும் என்று பேசியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.