மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல்
சுதந்திரப் போராட்ட தியாகியான சங்கரய்யா அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை,
சுதந்திரபோராட்ட தியாகி சங்கரய்யா (வயது 102). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக தியாகி சங்கரய்யா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தியாகி சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். தியாகி சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்கரய்யா அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தன் வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் அடைபட்டு துன்புற்ற வரலாற்று போராளியான சங்கரய்யா அவர்கள், 3 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்து தமிழக அரசியல் வரலாற்றில் தனித்தடம் பதித்து மறைந்துள்ளார்.
சமூகநலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி இறுதி வரை சேவை செய்த தகைசால் தமிழரின் புகழ் நீடித்து நிலைபெறட்டும். நேர்மையான அரசியலுக்கு முன்னோடியாக விளங்கிய அன்னாரது இழப்பு அரசியல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும், மக்கள் பணி செய்வோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது மறைவால் மிகுந்த வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன், என்று அதில் கூறப்பட்டுள்ளது.