ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம்;
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.ஜெயபெருமாள் தலைமையில் வக்கீல்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நிரூபிக்க இயலாத ஆதாரம் அற்ற வதந்திகளை வேண்டுமென்றே சிலர் பரப்பி உள்ளனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் காற்று, நீர், மாசு புற்றுநோய் பற்றிய கேள்விகளுக்கு அரசின் அறிக்கையை பெற்றுள்ளோம். அந்த அறிக்கையில் காற்று மாறுபாடு காரணமாக புற்றுநோய் உருவாகவில்லை என்று தெளிவாக அரசு பதில் அளித்துள்ளது.
மக்களை மூளை சலவை செய்து திசை திருப்பி போராட்டத்தில் ஈடுபட செய்து உள்ளனர். அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீஸ் துறைக்கு எதிராகவும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட பொதுமக்களை தூண்டி உள்ளனர். பொது அமைதியை குலைக்கும் நோக்கில் மக்களிடம் நேரடியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் வாழ்வை பாழ்படுத்தி உள்ளனர். ஆகையால் வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.