அமலில் உள்ள திட்டத்தை இயக்கவே அருகதையில்லாத அரசு தி.மு.க. அரசு - ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்
இருக்கின்ற திட்டங்களையே பராமரிக்க இயலாத திராணியற்ற அரசாக தி.மு.க. அரசு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப புதிய குடிநீர்த் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு மாநில அரசுக்கும் உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் இதற்கும் முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது. இருக்கின்ற திட்டங்களையே பராமரிக்க இயலாத திராணியற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் மீஞ்சூரில் உள்ள 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் மற்றும் நெம்மேலியில் உள்ள 260 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், இவற்றில் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 2024-ம் ஆண்டு முதலே செயல்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நானும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தேன். ஆனால், இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.
வட சென்னை பகுதிக்குட்பட்ட மணலி, எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையை மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் கடந்த ஓராண்டிற்கும் மேலாக, மேற்படி திட்டத்தை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பணிக்கு ஒப்பந்ததாரரை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் நியமிக்காததன் காரணமாக மேற்படி பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், புழல் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாகவும், ஆனால் இந்தத் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்றும், குறைந்த அழுத்தம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஓராண்டாக தண்ணீர் வருவதே இல்லை என்றும், குடிநீர் வரி கட்டினாலும் குடிநீர் இல்லை என்ற அவல நிலை நிலவுவதாகவும், ஒவ்வொரு நாளும் 120 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், மேற்படி பணிகளுக்கான ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஒரு பகுதி செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வருமா அல்லது வராதா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் முடங்கி அதனால் அப்பகுதி மக்களுக்கு நாளொன்றுக்கு 120 ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு இருப்பதற்கு தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம். ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு திட்டத்தை இயக்கவே அருகதையில்லாத அரசு தி.மு.க. அரசு என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
பல்வேறு சாதனைகளை புரிந்துவிட்டதாக கூறும் முதல்-அமைச்சர் மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனையை களைந்து அப்பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்க ஆவன செய்யுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.