இலவச விவசாய மின் இணைப்பு தட்கல் பதிவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
புதிதாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.;
கோப்புப்படம்
தமிழ்நாட்டில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக 23 லட்சத்து 60 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில், புதிதாக இலவச மின்சார இணைப்பு கேட்டு விவசாயிகள் பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், புதிதாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில், 2025-2026 நிதியாண்டில் இலவச விவசாய மின் இணைப்பு பெற, தமிழ்நாடு மின்வாரியம் தட்கல் திட்டத்தின் கீழ் டிசம்பர் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகங்கள் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும், நிலப்பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட ஆவணங்களில் சிட்டா, அடங்கல் உள்ளிட்டவைகளை கிராம நிர்வாக அதிகாரிகள்தான் வழங்க வேண்டும். ஆனால், கிராம நிர்வாக அதிகாரிகள் பணி நிமித்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றனர். குறிப்பிட்ட ஆவணங்களுக்காக பல நாட்கள் அழைந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இலவச விவசாய மின் இணைப்புக்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் முடிய இன்னும் 2 நாட்களே இருப்பதால், மேலும் நீட்டிப்பு தர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.