கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாசுக்கு அதிகாரம்: பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.;
சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயல்தலைவர் ஶ்ரீகாந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
- 2026-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாமக, உரிய நேரத்தில் அரசியல் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்பதற்கு ராமதாசுக்கு செயற்குழு முழு அதிகாரம் வழங்குகிறது. அத்துடன் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கும் அதிகாரத்தையும் ராமதாசுக்கு செயற்குழு வழங்குகிறது.
- டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் திறம்பட வாதாடி வெற்றி தீர்ப்பை பெற்றுத் தந்த சட்ட வல்லுநர் அருள் மற்றும் வக்கீல் குழுவினருக்கும், வழக்கு தொடர்ந்து கட்சியை மீட்டெடுத்த ராமதாசுக்கும் செயற்குழு நன்றி தெரிவித்து மகிழ்கிறது.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும், எல்லா சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவும் வலியுறுத்தி பாமக சார்பில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.
- முழு மது ஒழிப்பு கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.
- போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
- தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
- இலங்கை கடற்படை, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மீனவர்களை தாக்குவதும், சிறையில் அடைப்பதுமான கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வு காண கட்சத்தீவை மீட்க வேண்டும்.
- நீர் ஆதாரத்தில் தமிழ்நாடு கடைமடை மாநிலமாக உள்ளதாலும், வறட்சி காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாலும் நீர் ஆதாரத்தை மேம்படுத்த காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக கோரிக்கை வைக்கிறது.
- காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட தொடர் முயற்சி மேற்கொள்வதை தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் உரிமையை காக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- 142 அடியாக உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடன், நகைக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் குடும்பத்து குழந்தைகள் படிக்கவும், வேலை வாய்ப்பிற்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். புதுச்சேரியில் ஐகோர்ட்டு கிளை தொடங்கப்பட வேண்டும்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
- ராமதாசின் நற்பெயருக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பி வருபவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவதை வரவேற்று அங்கீகரிக்கிறது.
- ராமதாசுடன் 46 ஆண்டு காலம் பயணித்து, 25 ஆண்டு காலம் கட்சியின் தலைவராக செயல்பட்டு, 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ராமதாசின் நம்பிக்கைக்கு உரிய வகையில் ஓய்வறியாமல் உழைத்து கொண்டிருக்கிற, ஜி.கே. மணி எம்.எல்.ஏ.வை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, கட்சிக்கு தொடர்பில்லாத நபர்கள் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்ததற்கு செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. மேற்கண்டவை உள்ளிட்ட 27 தீர்மானங்கள் பாமக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.