மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு நலமுடன் உள்ளார்; இந்திய கம்யூ. தகவல்
நல்லகண்ணுவை யாரும் வந்து பார்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர்.;
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101). இவர் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே, நல்லக்கண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லக்கண்ணு நலமுடன் உள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். நல்லக்கண்ணுவை பார்க்க கட்சித்தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்,
நல்லகண்ணு உடல் நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நலமாகவுள்ளார். ஆனால், அவரை யாரும் வந்து பார்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, கட்சித்தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் யாரும் மருத்துவமணைக்கு வருகை தர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.