அ.தி.மு.க.-பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தேனி அல்லிநகரம் நகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;
தேனி அல்லிநகரம் நகராட்சியில் சொத்து வரி உயர்வு தொடர்பான அவசர கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆணையாளர் வீரமுத்துக்குமார் வரவேற்றார். தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் காலிமனை வரியை பொதுச்சீராய்வு மேற்கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
அப்போது அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர், பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் என 8 கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், நகராட்சி அலுவலகம் முன்பு வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள், சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.