செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு: புதுக்கோட்டையில் 8 மணி நேரம் தொடர் கலைநிகழ்ச்சி நடத்தி உலக சாதனை

செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் 8 மணி நேரம் தொடர் நடன கலைநிகழ்ச்சி நடத்தி சாதனை படைக்கப்பட்டது.

Update: 2022-07-25 15:50 GMT

புதுக்கோட்டை:

சர்வதேச அளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை பிரபலபடுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் புதுக்கோட்டையிலும் செஸ் போட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் புதுமையாக சிந்தித்து உலக சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து 8 மணி நேரம் நடன மாரத்தான் கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, இசைப்பள்ளி மாணவ-மாணவிகள், திருநங்கைகள் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதன்படி தொடர் நடன மாரத்தான் கலைநிகழ்ச்சி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார்.

இந்த கலைநிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு பதாககைளை கையில் ஏந்தியபடியும் நடனமாடினர். நாட்டுப்புற பாடல், சினிமா பாடல்களுக்கும் நடனமாடினர்.

மேலும் பரத நாட்டியம், கரகம் வைத்து நாட்டுப்புற பாடல்களுக்கும் ஆடி மாணவ-மாணவிகள் அசத்தினர். இடைவிடாமல் தொடர்ந்து 8 மணி நேரம் இரவு 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியை காண மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடல்கள் ஒலிபரபப்பட்ட நிலையில் கலையரங்கத்தில் இருந்த மாணவ-மாணவிகளும் உற்சாகத்தோடு நடனமாடி மகிழ்ந்தனர்.

இதுபோன்ற கலைநிகழ்ச்சி எங்கும் நடைபெறாத நிலையில் ஆசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் எனும் புத்தகத்தில் உலக சாதனையாக இடம் பெற்றது. இதற்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் கவிதாராமுவிடம் அந்த அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்