விடுமுறை அளித்த 30 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விடுமுறை அளித்த 30 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர் .;
கோவை
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விடுமுறை அளித்த 30 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர் .
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
அதற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அது கலவரமாக மாறியது. பள்ளியை சூறையாடி பஸ்களுக்கு தீ வைத் தனர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.
30 பள்ளிகள் விடுமுறை
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியை சூறையாடிய வன்முறை சம்பவத்தை கண்டித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனியார் பள்ளிகள் வழக்கம்போல் திறந்து செயல்பட வேண்டும். அரசின் உத்தரவை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து நேற்று போலீசார், கல்வித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் திறந்து உள்ளதா?. விடுமுறை அளிக்கப் பட்டு உள்ளதா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் திறக்கப்படாமல் இருந்த பள்ளிகளின் விவரங்களை சேகரித்தனர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கல்வித்துறையின் உத்தர வை ஏற்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. 30 தனியார் பள்ளிகள் மட்டும் நேற்று செயல்பட வில்லை. அந்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட் டது.
விளக்கம் கேட்கப்படும்
ஆனால் அது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் அந்த பள்ளிகளுக்கு வந்த மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரனிடம் கேட்டபோது, கோவை மாவட்டத்தில் விடுமுறை அளித்த பள்ளிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 611 தனியார் பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் நேற்று போலீசார், கல்வி அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இதில், 30 தனியார் பள்ளிகள் மட்டும் செயல்பட வில்லை. விடுமுறை அளித்தது தெரியவந்தது. மற்ற பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி, விடுமுறை அளித்த பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கோவை வ.உ.சி. மைதானம் மற்றும் பூங்காவில் மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தக்கூடும் என்று தகவல் பரவியது. எனவே அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு வந்தவர்களை கண்காணித்தனர்.