பெரம்பூரில் போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய மற்றொரு ஏட்டு மர்மசாவு - விசாரணைக்கு பயந்து தற்கொலையா?
பெரம்பூரில் ரெயில்வே போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய மற்றொரு ஏட்டு மர்மமான முறையில் இறந்தார். அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46). இவர் ரெயில்வே போலீசில் ஏட்டாக உள்ளார். தற்போது இவர் சென்னை பெரம்பூர் கேரேஜ் பணிமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் திருவள்ளூரை சேர்ந்த மற்றொரு ஏட்டு ஆரோக்கியசாமி (49) வேலை செய்து வந்தார். அவர், ஐ.சி.எப். பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். ஆரோக்கியசாமி, சக ஊழியர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.
இதனை ஜெயபிரகாஷ் கண்டித்தார். இந்தநிலையில் 3 நாட்கள் விடுமுறையில் இருந்த ஆரோக்கியசாமி, நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஜெயபிரகாசிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்தார். திடீரென ஆரோக்கியசாமி தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஜெயபிரகாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஜெயபிரகாசை அருகில் இருந்தவர்கள் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று காலை ஆரோக்கியசாமிக்கு அவரது குடும்பத்தார் போன் செய்தனர். நீண்டநேரம் ஆகியும் அவர் போனை எடுக்காததால் ஐ.சி.எப். பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது ஆரோக்கியசாமி, சுயநினைவு இன்றி கிடந்தார். அவரை அருகில் உள்ள ஐ.சி.எப். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஆரோக்கியசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆரோக்கியசாமி விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பால் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.