கல்வி கட்டணத்தை தவிர ரூ.66 ஆயிரத்தை வழங்க வேண்டும்

கல்லூரியை விட்டு விலகிய மாணவிக்கு கல்வி கட்டணத்தை தவிர மற்ற தொகையான ரூ.66 ஆயிரத்தை திருப்பி வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-07 18:45 GMT

வழக்கு தாக்கல்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மேலூர் சாலையில் வசிப்பவர் பாலசுப்ரமணியன்(வயது 52). இவரது மகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்து சுமார் ஒரு மாதம் கழித்து இதே மாணவிக்கு மருத்துவ இயக்குனரகம் நடத்திய கலந்தாய்வில் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இதனால் அவர் செலுத்திய தொகை ரூ.2,26,000 மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்திடம் மாணவி கேட்டுள்ளார். ஆனால் மாற்றுச்சான்றிதழை மட்டும் கொடுத்த கல்லூரி நிர்வாகம் செலுத்திய தொகையை தரவில்லை. தனது மகளுக்காக கல்லூரி நிர்வாகத்திடமும், எஸ்.ஆர்.எம். ஆக்சிஸ் என்ற நிறுவனத்திடமும் செலுத்திய தொகையை திரும்ப தர வேண்டுமென்று மாணவியின் தந்தை சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தீர்ப்பு

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு மாணவி உணவு விடுதிக்கு செலுத்திய தொகை ரூ.53 ஆயிரத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலத்துக்கான கட்டணம் ரூ.10,000 பிடித்துக்கொண்டு மீதமுள்ள ரூ.43 ஆயிரத்தை கல்லூரி நிர்வாகம் மாணவியின் தந்தையிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்காக கல்லூரியின் இணை நிறுவனமாக செயல்படும் எஸ்.ஆர்.எம். ஆக்சிஸ் என்ற நிறுவனத்தில் மாணவி செலுத்திய ரூ.25 ஆயிரத்தில் நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.2 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு மீதித்தொகை ரூ.23 ஆயிரத்தையும் அவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவிட முடியாது

மொத்த தொகை ரூ.66 ஆயிரத்தை மாணவியின் தந்தையிடம் நான்கு வாரங்களுக்குள் வழங்காவிட்டால் அதற்கு வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு முடிவடைந்து கல்லூரியில் சேர்க்கை இறுதி செய்யப்பட்ட பின்பு மாணவி கல்லூரியை விட்டு விலகி உள்ள காரணத்தால் அவர் கல்லூரியில் கல்விக் கட்டணமாக செலுத்திய தொகையை திருப்பி வழங்க உத்தரவிட முடியாது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்