880 பேருக்கு பணி நியமன ஆணை
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 119 நிறுவனங்களில் 880 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.;
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 119 நிறுவனங்களில் 880 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தொழில்துறை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பல்வேறு ஒப்பந்தங்கள் அடிப்படையில் படித்த இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பை பெற்று தந்து கொண்டிருக்கிறார்கள். படித்த ஆண்கள், பெண்களுக்கு அவர்களது கல்வி திறனுக்கு ஏற்ற தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை முழுமையாக வழங்கிடும் வகையில் சிறந்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
பணி நியமன ஆணை
அதன்படி மாவட்ட அளவில் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 119 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 880 பேர் இந்த வேலை வாய்ப்பு முகாமின் மூலம் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், மாநில மகளிர் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் பவானி ராஜேந்திரன், யூனியன் தலைவர்கள் திருப்புல்லாணி புல்லானி, மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருவாடானை முகமது முக்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.