திருக்குறளின் 108 அதிகாரங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா?-பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி

திருக்குறளின் 108 அதிகாரங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா?-பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Update: 2022-09-26 20:23 GMT

மதுரையை சேர்ந்த வக்கீல் ராம்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலக பொதுமறையாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் படித்து பயன்பெறும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் பிரெய்லி முறையில் புத்தகங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்"் என கூறியிருந்தார்.

இதுகுறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி ஆஜராகி, கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை (அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்கள்) பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை. அதாவது புத்தகங்களின் திருக்குறள்களை இறுதி பக்கத்தில் அச்சிட்டுள்ளனர். ஆனால் அவற்றை மாணவர்களுக்கு விளக்கி கூறுவதும் இ்ல்லை, அவற்றில் இருந்து தேர்வுகளில் கேள்விகளும் கேட்பது இல்லை. இதனால் பாடப்புத்தகத்தில் மேற்கண்ட திருக்குறளை சேர்க்க வேண்டும் என்பதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த உத்தரவை கடுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்