மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன் கைது
தாராபுரம் அருகே ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிக்கொடி மற்றும் தங்கச்சங்கிலி உள்ளிட்ட 13 பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.;
தாராபுரம் அருகே ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிக்கொடி மற்றும் தங்கச்சங்கிலி உள்ளிட்ட 13 பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டியிடம் நகை பறிப்பு
தாராபுரம் கொட்டாப்புளி பாளையம் ரோடு டாக்டர் நகரைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து, விவசாயி. இவருடைய மனைவி திருமாத்தாள் (வயது 65). கடந்த மே மாதம் 27-ந் தேதி மாலை ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்கச்சங்கிலி உள்ளிட்ட 13 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
கைது
இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிறகு மூதாட்டியின் கணவர் நாச்சிமுத்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின்பேரில் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு த.கலையரசன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொள்ளையனை வலைவீசி தேடிவந்தனர்.
இது தொடர்பாக அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பிறகு ரகசிய தகவலின் பேரில் விருதுநகர் பைபாஸ் ரோடு கிழக்கு பாண்டியன் காலனியை சேர்ந்த நாகூர் செல்வம் மகன் பாண்டி செல்வம் என்கிற பாண்டியராஜன் (29) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.
நகை மீட்பு
பின்னர் பறித்துச்சென்ற 13 பவுன் தங்க நகைகளை மீட்ட போலீசார் தாராபுரம் நீதிமன்றத்தில் பாண்டியராஜனை ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் திருட்டு சம்பவ வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.