ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-07-29 20:16 GMT


பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விண்ணப்பம்

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52), வெள்ளி கொலுசு பாலீஸ் செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவி சுபா. கடந்த 2007-ம் ஆண்டு மனைவி பெயரில் இடம் வாங்கி அங்கு ரமேஷ் வீடு கட்டியுள்ளார். அந்த இடத்தின் பட்டாவை மனைவி பெயருக்கு மாற்றக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தெற்கு தாலுகா அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி விண்ணப்பித்து இருந்தார்.

அங்கு நிலஅளவையர் பிரிவில் பணிபுரியும் நகர சர்வேயர் முத்துப்பாண்டி (42), அந்த இடத்தை அளந்து உள்ளார். பின்னர் அதுதொடர்பாக அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ரூ.7 ஆயிரம் லஞ்சம்

அதன்பின்னர் ரமேஷ் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று முத்துப்பாண்டியிடம் பட்டா குறித்து பேசியதற்கு. பட்டா வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று ரமேஷ் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் பட்டா கொடுக்க முடியும் என்று சர்வேயர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி ரமேஷ், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து நேற்று ரமேசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணநோட்டுகளை கொடுத்து அனுப்பினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்தில் வைத்து சர்வேயர் முத்துப்பாண்டியிடம் அந்த பணத்தை கொடுத்தார்.

சர்வேயர் கைது

அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, சூரியகலா, குமரகுரு, ஆம்புரோஸ் மற்றும் போலீசார் கையும் களவுமாக சர்வேயர் முத்துப்பாண்டியை பிடித்து கைது செய்தனர். இந்த நடவடிக்கையால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்