பாலக்கோட்டில்போலி டாக்டர் கைது

Update: 2023-04-28 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோட்டில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சோதனை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரை வழங்குவதாக மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சாந்திக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர் நேற்று பாலக்கோடு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்கோடு சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் மருத்துவ குழுவினர் சோதனை நடத்தினர்.

கைது

அந்த மருந்தகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 48) என்பவர் பிளஸ்-2 வரை மட்டும் படித்துவிட்டு பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. கடந்த 15 ஆண்டுகளாக அவர் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ குழுவினர் மருந்தகத்தில் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று போலி டாக்டர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் மருந்தகத்தை பூட்டி `சீல்' வைத்தனர். போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்