விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி அருகே விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-02 18:45 GMT

3 பேர் படுகாயம்

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வைரவன் (வயது 38). கடந்த 28-ந்தேதி இவர், தனது மனைவி அமுதா, மகன் யாதேஷ் (3) ஆகியோருடன் பழனிசெட்டிபட்டி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். புறவழிச்சாலையில் திரும்பிய போது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாரியம்மன் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஊரிலிருந்து புறப்பட்டு புறவழிச்சாலை, போடி-தேனி சாலை சந்திப்பு பகுதிக்கு வந்தனர்.

சாலை மறியல்

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் அடையாளம் கண்டுபிடித்த போதிலும் வாகன ஓட்டியை கைது செய்யாமல் இருப்பதாக கூறி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

மறியல் செய்தவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்