நத்தம் அருகே மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

நத்தம் அருகே மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-20 19:03 IST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரை சேர்ந்தவர் சொக்கநாராயணன் (வயது 37). இவர் நேற்று இரவு சாணார்பட்டி அருகே கல்லுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார். நத்தம் அருகே கணவாய்பட்டி பகுதியில் அவர் வந்தபோது, முன்னால் சென்ற மினி வேன் மீது கார் மோதியது.

பின்னர் காரை நிறுத்தாமல் சொக்கநாராயணன் சென்றுவிட்டார். இதற்கிடையே விபத்து குறித்து சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு காரை தடுத்து நிறுத்துவதற்காக சாலையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. ஆனால் அதிவேகத்தில் வந்த சொக்காநாராயணனின் கார், அந்த தடுப்பு கம்பிகளை மோதி தள்ளிவிட்டு வேகமாக சென்றது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, ஜான்சன் மற்றும் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் சென்றபோது, சொக்கநாராயணனின் காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டிவந்த சொக்கநாராயணன் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கார் மோதியதில், மினிவேனில் வந்த மதுரையை சேர்ந்த பிரித்தா (25), பாண்டிச்செல்வி (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்