நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது;
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் போக நெல் சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது பாசனத்திற்கு 200 கன அடி, தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கனஅடி என வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது
இதையடுத்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி முதல் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 135.40 அடியாக உயர்ந்தது.
கூடுதல் தண்ணீர் திறப்பு
இந்நிலையில் மத்திய நீர் வள ஆணையத்தின் ரூல்கர்வ் முறைப்படி அணையில் 136.6 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி கொள்ள முடியும். இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று அணையில் இருந்து குழாய்கள் வழியாக வினாடிக்கு 1,885 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் குழாய்கள் வழியாக வினாடிக்கு 1,900 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 116 கனஅடி என மொத்தம் 2,016 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர்மட்டம் 135.60 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1114 கனஅடியாகவும் உள்ளது. இதற்கிடையே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.