நெகமம் புதிய பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படுமா?- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

நெகமம் புதிய பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-07-31 20:38 IST

நெகமம்

நெகமம் புதிய பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலூட்டும் அறை

ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் முதல் நாள் உலக தாய்ப்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு உலக தாய்ப்பால் தினத்தின் போது தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படும் என அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து நெகமம் புதிய பஸ் நிலையத்தில் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இந்த அறை திறந்து சிறிது காலமே பயன்பாட்டில் இருந்தது. பின்னர் நீண்ட காலமாக பூட்டியே இருப்பதால் தாய்மார்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

தாய்மார்கள் தவிப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும் நெகமம் பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். இதில் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களும் உள்ளனர். அவ்வாறு வரும் பெண்கள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படும் போது குழந்தை பசியால் அழுகிறது. ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு மறைவான இடம் இல்லாமல் பெண்கள் தவிக்கின்றனர்.

இதனால் பசித்து அழும் குழந்தைகளுக்கு வேறு வழியில்லாமல் புட்டிப்பாலையோ, அருகில் உள்ள டீக்கடைகளில் இருந்து சுகாதாரமற்ற பாலையோ வாங்கிக்கொடுக்கும் அவலநிலை உள்ளது.

உடனடியாக திறக்க வேண்டும்

இதனால் குழந்தைகள் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே நெகமம் புதிய பஸ் நிலையத்தில் தாய்மார்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட பாலூட்டும் அறையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் பயன்படுத்தும் அறை என்பதால் முழுமையாக சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடாமல் கண்காணிப்பது அவசியமாகும். இவவாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்