பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில்பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பெரியகுளம் தென்கரை வராகநதி கரையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை கொடி கம்பத்திற்கு பல்வேறு திருமஞ்சன பொருட்களால் பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 3-ந்தேதி மாலை நடைபெறுகிறது.