தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்2-வது நாளாக வருமானவரி சோதனை

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

Update: 2023-09-21 18:45 GMT

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அனல்மின் நிலையம்

அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு உபகரணங்களை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் வழங்கி உள்ளது. இதில் முறைகேடுகளில் ஈடுபட்டு, வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த நிறுவனம் தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்வதற்காக சுமார் ரூ.250 கோடி செலவில் லிங்க் கன்வேயர் பெல்ட் மற்றும் துறைமுகத்தில் உள்ள 1-வது கரித்தளம் மறு சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு உள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை மாலை வரை நடந்தது.

2-வது நாளாக சோதனை

நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் அனல்மின் நிலையத்தில் மீண்டும் சோதனை நடத்தினர். காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அனல்மின் நிலையத்துக்கு வந்தனர். அங்கு லிங்க் கன்வேயர் பெல்ட் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சப் காண்டிராக்டர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சில நிறுவனங்களை சேர்ந்தவர்களும் அனல்மின் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனை மாலை 3 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு ஏராளமான ஆவணங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் புறப்பட்டு சென்றனர்.

------------

Tags:    

மேலும் செய்திகள்