நிலப்பிரச்சினையில் மின்வாரிய ஊழியர், மனைவியை கொலை செய்ய முயற்சி வீடியோ வைரலானதால் பரபரப்பு
நிலப்பிரச்சினையில் மின்வாரிய ஊழியர், மனைவியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஆயந்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய மனைவி ராஜசுலோக்சனாவின் (42) தம்பியான கூலித்தொழிலாளி அரிகிருஷ்ணன் (40) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக அய்யனார், தனது மைத்துனர் அரிகிருஷ்ணனிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன், அய்யனாரை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த ராஜசுலோக்சனாவையும் தாக்கி, கத்தியால் அவரது தலையில் வெட்டினார்.
இதில் காயமடைந்த அய்யனார், ராஜசுலோக்சனா ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அய்யனார், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அரிகிருஷ்ணன் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அரிகிருஷ்ணன், அளித்த புகாரில் தன்னை அய்யனார், அவரது மனைவி ராஜசுலோக்சனா ஆகிய இருவரும் தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில் அவர்கள் இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே அரிகிருஷ்ணன், நிலப்பிரச்சினையால் தனது சகோதரி ராஜசுலோக்சனாவை நடுரோட்டில் வைத்து கத்தியால் வெட்டிய சம்பவம் வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.